Friday, June 12, 2009

திரைப்படம்: 'பசங்க'


சாமான்ய மனிதர்களை கதி கலங்க வைக்கும் வில்லன், அவனுக்கு இரண்டு எடுபிடிகள், அவனுக்கு ஒரு மாமன் மகள், ஊரே நடுங்கி கொண்டிருக்க ஒபெனிங் பாடலோடு வரும் கதாநாயகன், வில்லனுக்கும் கதாநாயகனுக்கும் முட்டல், மோதல், வில்லனின் மாமன் பொண்ணோடு சிநேகம் கொள்ளும் கதாநாயகன், அதனால் எரிச்சலுரும் வில்லன், கடைசியில் வில்லன் மனம் மாறுதல், படத்தின் இறுதியில் ஒரு குரூப் போட்டோ. சுபம்.

இதுதான் இப்போது பரபரப்பாக ஓடி கொண்டிருக்கும் பேசப்படும் 'பசங்க' படத்தின் கதை. இது என்ன புதுசு. இது வழக்கமாக காலம் காலமாக தமிழ் சினிமாவில் அரைத்து ஊறி போன பழைய மாவுத்தானே என நினைக்கிறீர்களா.

இந்த திரைப்படத்தில் வரும் வில்லன், கதாநாயகன், மாமன் பொண்ணு எல்லாருமே சின்ன 'பசங்க' அது தான் வித்தியாசம்.

இதுவரை சிறுவர்களுக்கான ஒரு திரைப்படம், அவர்களின் வாழ்கையின் ஊடாக பயணம் செய்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் தமிழில் இதுவே முதல் முயற்சி. இரானிய திரைப்படங்களான சில்றேன் ஆப் ஹெஅவேன், கோரிய திரைப்படமான தி வே ஹோம் மற்றும் ஹாலிவூடில் சிறுவர்களுக்கான பல திரைப்படங்களை சொல்லலாம். தமிழில் இது போல சிறுவர்களுக்காக எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் இதுவரை வந்ததில்லை என்றே சொல்லலாம்.

இப்படி ஒரு வித்தியாச முயற்சி எடுத்தமைக்காக இயக்குனர் பாண்டிராஜயும் தயாரிப்பாளர் சசிகுமாரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஒரு நடுத்தர நகரத்தில் அரசு பள்ளியில் படிக்கும் ஜீவா அண்ட் கோ வின் அட்டகாசம் எல்லை மீறுகிறது. மக்கள் எல்லாம் காவல் துறையில் முறையிடும் அளவுக்கு. தங்களை எதிரிகளாக நினைக்கும் மனிதர்களின் வீட்டின் முன் 'தயிர்சாதம்' , புளியோதரை, 'பொங்கல்' என கக்கா போய் அசிங்கம் பண்ணுகிறார்கள். அவர்கள் வீட்டு குழந்தைகளை கிள்ளி விட்டு கிலி கொடுக்கிறார்கள். ஜீவா வாத்தியார் வீட்டு பிள்ளை என்பது பள்ளியில் அவனுக்கு வசதியாக போய் விட கூட படிக்கும் சிறுவர்களுக்கு எல்லாம் தாதாவாக உருவெடுக்கிறான்.

அவனால் பாதிக்கப்பட்ட அவ்வூரில் உள்ள பெருசுகள், 'உன் கொட்டத்தை அடக்க ஒருத்தன் வராமலா இருக்க போகிறான்' என சபிக்க அந்த ஊருக்கு படிக்க வருகிறான் அன்பு. அவனுடைய அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஓயாத சண்டை இருந்தாலும் நன்றாக படித்து முதல் மாணவனாக வருகிறான் அன்பு. ஜீவாவுக்கு அடங்காத அன்பு அவனுடன் நட்பு வளர்க்க பிரியபட்டும் அது நிறைவேறாது போகவே, ஜீவாவால் எதிரியாகவே பார்க்கப்படுகிறான் அன்பு.

ஜீவாவின் அத்தை பெண்ணும் அன்புக்கு நண்பியாக மாற ஜீவாவின் லீடர் போஸ்ட் அன்புவுக்கு போக மிக கொவமடையும் ஜீவா அன்புவை தன முதல் எதிரி என கொள்கிறான்.ஜீவாவின் பக்கம் சிலர், அன்புவின் பக்கம் பலர் என குரூப் பிரிகிறது. அன்பு முதல் ரேங்க் வாங்க ஜீவா அவனுடன் போட்டி போட்டு படிக்க படிப்பிலும் சந்திலும் முட்டி கொல்கிறது. இடையில் இவர்கள் பிரச்சனையால் இரு குடும்பளுக்குள்ளும் முட்டல் வர பிரிந்து நிற்கிறது இரு குடும்பங்களும். அன்புவின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிரச்சனையை வர அதனை யதார்த்ததோடு அணுகி தீர்த்து வைக்கிறார் ஜீவாவின் அப்பா ஆசிரியர் சொக்கலிங்கம்.

குடும்பங்கள் இணைந்தாலும் திமிறிக்கொண்டு எதிரும் புதிருமாக நிற்கிறார்கள் அன்பு மற்றும் ஜீவா. அவர்கள் இணைந்தார்களா என்பதே கிளைமாக்ஸ்.

இப்போதெல்லாம் அருமையான சினிமாக்கள் தமிழில் வெளி வருகின்றன. பசங்க அதற்க்கு ஒரு எடுத்துக்காட்டு. எனது பள்ளி பருவ காலம் என் நினைவில் வந்து முட்டியது. சிறு பிள்ளைகளுக்கு இப்படம் ஒரு வரப்பிரசாதம். அவர்களுக்குள் நடக்கும் யுத்தத்தை கூறும் படம் அவர்களுக்கு நல்ல விஷயங்களையும் சொல்லி கொடுக்கிறது. ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் ஒரு நல்ல மெசேஜ் சொல்லப்படுவது ஆரோக்கியமான விஷயம்.

ஜீவாவாக வரும் அந்த சிறுவனின் நடிப்பு மிக சிறப்பாக இருக்கிறது. கண்களை உருட்டுவதும் முகத்தில் குரோதத்தை காட்டுவதுமாக நல்ல முகபாவங்கள். பகாடாவாக வரும் சிறுவன் நகைச்சுவைக்கு க்யாரண்டீ தருகிறான்.

ஜெம்ஸ் வசந்தனின் இசை படத்துக்கு பக்க பலம். பலமுரளிக்ரிஷ்னா பாடும் 'அன்பாலே அழகாகும் வீடு' சுகமான தாலாட்டு என்றால், 'ஒரு வெட்கம் வருதே வருதே' குற்றால சாரலின் தாக்கம்.

படத்தோடு சேர்ந்து பயணிக்கிறது கேமரா. இயல்பான ஒளிப்பதிவு.


படத்தின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட் படத்தின் கிளைமாக்ஸ். கைதட்டுதல் மூலம் கண் திறக்கவைக்கும் டெக்னிக் சிறுபிள்ளைதனமாக இருக்கிறது. இயல்பான படத்துக்கு இவ்வளவு செயற்கையான கிளைமாக்ஸ் வைத்திருக்க வேண்டாம். உருக்கமான அந்த காட்சியில் சிரிப்பு தான் வருகிறது.

இயக்குனர் பாண்டி ராஜ் க்கு படத்தை பார்த்த பசங்க எல்லோர் சார்பிலும் ஒரு 'ஒ '

No comments:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...