Tuesday, August 4, 2009

உலக சினிமா: டாக் டு ஹெர் (Talk to Her).


மனித உறவுகளை அதன் ஆளுமையுடன் சொல்லும் படங்கள் என்னை மிகவும் பாதிக்கின்றன. அப்படி என்னை சமீபத்தில் பாதித்த படம் தான் இஸ்பாநியெல் படமான 'டாக் டு ஹெர். ஐரோப்பிய இயக்குனர்களில் மிக சிறந்த படைப்பாளர்களில் ஒருவரான பெத்ரோ அல்மோடோவர் இயக்கி இருக்கிறார்.

படத்தின் கதை இரு ஜோடிகளை பற்றியது.
பெநிக்னோ ஒரு நாட்டிய நாடகத்தில் அமர்ந்திருக்கிறான். அதில் நடிக்கும் பெண்கள் நடனமிட்டபடி சுவற்றில் மோதி விழுகிறார்கள்.ஒருவன் அவர்கள் போகும் பாதையில் இருக்கும் நாற்காலிகளை விலக்கி வைக்கிறான். அந்நாடகத்தை பார்த்துகொண்டிருக்கும்போது தனக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவர் அழுது கொண்டிருப்பதை பார்க்கிறான். அழுது கொண்டிருப்பவன் தான் மார்கோ. இருவருக்கும் காதலிகள் இருக்கிறார்கள். இருவரை பற்றியது தான் கதை.

1.பெநிக்னோ.
பெநிக்னோ ஒரு ஆம்பிளை நர்ஸ். தனது அம்மா நோய்வாய்ப்பட்டு கிடந்த போது அவளுக்கு பணிவிடைகள் செய்தவன். அவளுக்கு உதட்டு சாயம் பூசி, தினமும் உடம்பை துடைத்தெடுத்து, அவளை ஒரு குழந்தையாய் போல பார்த்து கொண்டவன். அவள் இறந்த பின் அவனுக்கு தனிமை வாட்டுகிறது. அவனது ஜன்னலின் வழியே பார்த்தால் அங்குள்ள நடனப்பள்ளி ஒன்று தெரிகிறது. அதில் ஒரு பெண் ஜன்னலின் அருகே நின்று ஆடுவதை தினமும் பார்த்து அவள் மேல் காதல் கொள்கிறான். அவளை தொடர்ந்து சென்று அவள் பெயர் அலிசியா என்றும் அவள் தந்தை ஒரு மனோதத்துவ மருத்துவர் என்றும் அறிந்து கொள்கிறான். அவள் நடனப்பள்ளிக்கு வருவது ஒரு நாள் நின்று விடுகிறது. காரணத்தை அறிகிறான். அவளுக்கு பெரும் விபத்து ஏற்பட்டு ஒரு ஆஸ்பத்திரியில் கோமாவில் இருப்பதாக தகவல். அவளுக்கு எந்நேரமும் கூடவே இருக்க நர்ஸ் வேண்டும் என்ற விளம்பரத்தை பார்த்து, தான் ஒரு 'கே'(ஒரினசெர்க்கயாளன்) என கூறி நர்ஸ் வேலை வாங்கி அவளுடனேயே இருந்து அவளை அல்லும் பகலும் பார்த்துக் கொள்கிறான். ஆவலுடன் பேசி கொண்டே இருக்கிறான். அவளுக்கு தூரத்துணி மாற்றுகிறான். குளிக்க வைக்கிறான். உடை மாற்றி விடுகிறான்.பெடி கூர்,மினி கூர் செய்து விடுகிறான் ஆனால் ஓயாமல் பேசி கொண்டே இருக்கிறான். அன்று பார்த்த நாடகத்தை பற்றி சொல்கிறான். ஒருவன் தன்னருகில் அமர்ந்து அந்நாடகத்தை பார்த்து அழுதது பற்றியும் சொல்கிறான்.

2. மார்கோ.
ஸ்பெயினில் நடைபெறும் காலை சண்டையில் கலந்து கொண்டு வெற்றிபெற வேண்டும் என்ற தன் தந்தையின் கனவை நனவாக்க புறப்படும் லிடியாவை எள்ளி நகயாடுகிறான் அவளது காதலன். அவளுடைய முன்னாள் காதலன் தான் மார்கோ ஒரு பத்திரிக்கையாளன். அவளது கனவு நனவாவதற்கு துணையாக இருக்கிறான். அன்று நடந்த சண்டையில் காளை லிடியாவை பிய்த்து போடுகிறது. அவள் கோமாவிற்கு தள்ளப் படுகிறாள்.

லிடியாவை அலிசியா இருக்கும் மருத்துவமனையிலேயே சேர்க்கப் படுகிறாள். அலிசியாவை அல்லும் பகலும் அவளருகில் இருந்து கவனித்துக் கொள்ளும் பெநிக்னோ அவனது கவனத்தை கவர்கிறான். அவனிடம் நட்பு கொள்கிறான் மார்கோ. கோமாவில் இருக்கும் நோயாளிகளிடம் பேசி கொண்டே இருக்க வேண்டும், அவர்களை சக மனிதர்களை போலவே நடத்த வேண்டும். என்றாவது ஒரு நாள் அவர்கள் விழித்துக் கொள்ளும் அதிசயம் நிகழலாம் என அவனுக்கு கற்று கொடுக்கிறான் பெநிக்னோ. இருவரும் நண்பர்கள் ஆகின்றனர்.ஒருவர் இல்லாதபோது மற்றொருவர் இருவரின் காதலிகளையும் பார்த்துக் கொள்வது என உதவிக் கொள்கின்றனர்.

அப்போது லிடியாவின் இந்நாள் காதலன் வந்து தான் லிடியாவை பார்த்துக் கொள்வதாக கூற, அதுவே ஞாயம் என மார்கோ தனது வேலையே பார்க்க வெளிநாடு கிளம்பி போகிறான். இதனிடையே, அலிசியாவிற்கு மாதவிலக்கு நின்று பொய் வயிறும் வீங்க ஆரம்பிக்க அவள் கர்ப்பமாக இருப்பது உறுதிப்படுகிறது. மருத்துவமனையில் இருக்கும் அனைவருக்கும் பெநிக்நோவின் மீது சந்தேகம். அவன் சிறையில் அடைக்கப்படுகிறான்.

இதனை கேள்விப் பட்ட மார்கோ ஸ்பெயின் நாட்டுக்கு மீண்டும் வந்து அவனுக்கு உதவ முனைகிறான்.லிடியா மறித்து போனதை அறிகிறான். பெநிக்நோவை சிறையில் சந்திக்க, அலிசியாவை பார்க்காமல் அவளுடைய கூந்தல் க்ளிப் கூட இல்லாமல் தன்னால் காலம் தள்ளுவது சிரமமாக இருக்கிறது என கூறுகிறான். வழக்கு முடியும் வரை, தனது வீட்டில் தங்கிக் கொள்ளும்படி மார்கோவிடம் கூறுகிறான்.

மார்கோ அந்த ஜன்னலின் வழியே பார்க்க அலிசியா அந்த நடன பள்ளிக்கு வந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறான். வக்கீலிடம் பேசும்போது அவள் பிரசவத்தின் பொது குழந்தை இறந்து பிறந்தது என்றும் பிரசவத்தில் அவளுக்கு சுயநினைவு வந்து விட்டது என்றும் கூறி, பெநிக்னோ இப்போது மனோவ்யாதி முற்றி ஒரு சைக்கோவாக இருக்கிறான். இந்த உண்மையை கூறினால் நிலைமை மோசமாகும் என சொல்கிறான்.

மார்கோ உண்மையை மறைத்து விடுகிறான். ஒரு நாள் ஒரு தொலைபேசி வருகிறது. வாய்ஸ் மெயில் விட்டிருக்கிறான் பெநிக்னோ. 'அலிசியா இல்லாத வாழ்க்கை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. எனவே நான் அலிசியாவின் வாழ்க்கைக்கு போக போகிறேன்'. மார்கோ உடனே அலிசியா உயிருடன் இருப்பதாக கூறுவதற்கு சிறைக்கு வேக வேகமாக ஓடுகிறான். ஆனால், தூக்க மாத்திரைகளை அதிகம் உண்டு, இறந்து விடுகிறான் மார்கோ. கல்லறையில் அவனுடன் பேச துவங்குகிறான் மார்கோ. அவள் விழித்திருக்கும்போது நீ துயில் கொண்டாயே என கண் கலங்குகிறான்.

2002 இல வெளியான இத்திரைப்படம், சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதையும், சிறந்த இயக்குநருக்காக பரிந்துரைக்கப்படும் இருக்கிறது. முன்னும் பின்னும் ஆக செல்லும் திரைக்கதை, ஒரு சிறந்த சவால். இயக்கமும் திரைக்கதையும் தெளிவாக இருக்கிறது. பெநிக்னோ வாக நடித்திருக்கும் ஆவியர் கமரா (Javier Cámara) அற்புதமாக நடித்திருக்கிறார். காதலியின் மேல் தனக்கிருக்கும் இயல்பை கடந்த ஒரு ஈர்ப்பை, பாசத்தை, காதலை இதனைவிட வேறு யாரும் வெளிப்படுத்தல் இயலாது.

படத்தில் வரும் அந்த நாடகங்களும் இஸ்பானிய பாடல்களும் கதைக்கு ஏற்ப உள்ளத்தை உருக்குவதாக அமைந்துள்ளது.
பெண்கள் தன்னுடன் பேசுவதை அதிகம் விரும்புவார்கள். கோமாவில் இருந்தாலும் என படத்தில் ஒரு வசனம் வருகிறது. அது சத்தியமான உண்மை. பெரும்பாலான பெண்கள் தனிமையானவர்கள்.பெண்களுடன் பேசுங்கள் பேசி கொண்டே இருங்கள் அதை விரும்புவார்கள்.

3 comments:

ஹேமா said...

முகிலன்,ஏன் தமிழ்ப்படங்கள் இப்படி இயல்பான கதையமைப்பில் எடுக்கிறார்கள் இல்லை என்பது என் ஆதங்கம்.

NILAMUKILAN said...

வாங்க ஹேமா. இப்போ தமிழிலும் குறிப்பிடத்தக்க நல்ல படங்கள் வர ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான விடயம். உதாரணத்திற்கு பசங்க, சுப்ரமணியபுரம்,பூ மற்றும் நாடோடிகளை சொல்லலாம். மேலும் நல்ல படங்கள் வரும் என நம்பலாம்.

ஆதவா said...

உங்கள் தளத்தை இப்பொழுதுதான் பார்க்கிறேன். அருமையான விமர்சன்ம்!!
இப்படத்தை நானும் எழுதியிருக்கிறேன்.

http://aadav.blogspot.com/2011/01/hable-con-ella.html

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...