Wednesday, January 4, 2012

உலக சினிமா: The boy in the striped pajamas



யூதர்களை கொன்று குவித்த ஜெர்மானியர்களைப் பற்றிய திரைப்படங்கள் எவ்வளவோ வந்து விட்டன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சோக கதைகளை கூறின. இரு சிறுவர்களின் நட்பின் பின்னணியில் எனக்கு தெரிந்து யூத கொடுமைகளை சொல்லியபடம் தி பாய் வித் ஸ்ட்ரைப்ட் பஜாமாஸ் என்கிற இந்தப் படமே. கொடுமைகளை அப்பட்டமான காட்சிகளால் காட்டி நம்மை நெளிய வைக்க விடாமல் நம்மை அந்த கொடுமைகளை உணர செய்ததன் மூலம் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர்.

ப்ருனோ என்கிற அந்த எட்டு வயது சிறுவனுக்கு போரைப் பற்றியோ யூதர்களைப் பற்றியோ எதுவும் தேரியாது.

அவனது வயதுக்குரிய நண்பர்களோடு விளையாடி, பள்ளி சென்று காலம் கழித்து வரும் அவன் தனது தந்தைக்கு பதவி உயர்வு கிடைத்து ஊர் மாறி செல்லும் செய்தி அறிந்து வருத்தம் அடைகிறான். அவனது நண்பர்களை பிரிந்து செல்ல நேரிடும் என்ற கவலை தான் அவனுக்கு. அவர்கள் இல்லமே விழா கோலம் பூண்டு அவன் தந்தையின் பதவி உயர்வை கொண்டாடிக் கொண்டிருக்கையில், ப்ருநோவின் அந்த குட்டி நீல கண்களில் சோகம் மட்டும் பளபளக்கிறது.

வந்து சேரும் புதிய இடமோ, ஊரை விட்டு ஒதுக்குபுறமாக இருக்கிறது. தன்னுடன் விளையாட ஆள் கிடைக்காத ப்ருனோ, தனது பெட்ரூம் சன்னல் வழியாக தொலைவில் வேலி போட்ட ஒரு இடத்தை காண்கிறான். அது என்ன என விசாரிக்கையில், அது ஒரு தோட்டம் என்றும் அங்கு ஆட்கள் வேலை செய்கிறார்கள் என்றும் தெரிகிறது. அவனுக்கு அங்கு விளையாட சிறுவர்கள் கிடைப்பார்கள் என உணர்கிறான். யாரும் அறியாத வண்ணம், அந்த தோட்டம் நோக்கி பயணப்படுகிறான். அங்கு வேலிக்குள்  யூதர்கள் கோடு போட்ட பைஜாமா உடையில் உயிர்வாழ்வதை காண்பவன், வேலி ஓரத்தில் மறைவில், தனது வயதை ஒத்த ஒரு சிறுவன் தலை குனிந்து அமர்ந்திருப்பதை காண்கிறான். அவனுடன் பேச்சு கொடுக்கும் ப்ருனோ, அந்த சிறுவனின் பெயர் ஷ்மூல் என்றும், அவனுக்கும் வயது தன்னை போல எட்டு என்றும் அறிகிறான்.

ஒவ்வொரு நாளும் ஷ்மூலுக்கு உண்ண தின்பண்டங்கள் கொண்டு வருகிறான். வெளிகளுக்கு பின்னால் ஷ்மூலும், வேலிகளின் வெளியே ப்ருனோ அமர்ந்திருக்க இருவரும் தினமும் பேசி களித்து விளையாடி, அவர்களின் நட்பு இறுகுகிறது. ஒருமுறை ப்ருநோவின் வீட்டில் கண்ணாடிகளை பாத்திரங்களை துடைப்பதற்கு அழைத்து வரப்படுகிற ஷ்மூலுக்கு தின்பண்டம் தின்னக் கொடுக்க, அதனை கண்டு விட்ட ஒரு ஜெர்மானியன் அவனை பிடித்து விட, ஷ்மூல், அந்த தின்பண்டத்தை தான் திருடவில்லை என்றும் தனது நண்பன் ப்ருனோ கொடுத்தது என்றும் சொல்ல, ப்ருனோ அவனால் மிரட்டப்பட, பயத்தில் ப்ருநோவோ, ஷ்மூல் யார் என்றே தெரியாது என்று சொல்லிவிட, ஷ்மூலுக்கு அவனால் தண்டனை கிடைக்கிறது.

தனது செயலால் மிகுந்த வருத்தமும் வேதனையும் குற்ற உணர்வும் அடைகிறான் ப்ருனோ. பின்னர் அவன் ஷ்மூலை தேடி செல்ல, அவனை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. சில நாட்களுக்கு பிறகு மீண்டும் ஷ்மூலை அவன் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் சந்தித்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறான்.அதற்க்கு பிராயச்சித்தமாக, காணமல் போன ஷ்மூலின் தந்தையை கண்டுபிடிக்க தான் உதவுவதாகக் கூறுகிறான்.

ஒரு மழைநாளில், அந்த கோடு போட்ட பைஜாமா சீருடையில் ஷ்மூல் வேலியின் உள்ளே காத்திருக்க, ஒரு கழி கொண்டு வேலியின் வெளியில் இருந்து வேலிக்கடியில் குழி தோண்டி, வெளிக்குள் சென்று, ஷ்மூலின் சீருடை அணிந்து கொண்டு ஷ்மூலின் தந்தையை கண்டுபிடிக்க புறப்படுகிறார்கள் நண்பர்கள் இருவரும். அடுத்து வருவது பதை பதிக்கும் கிளைமாக்ஸ்.

பிரபல எழுத்தாளரான ஜான் பாயனின் (John Boyne) நாவலான தி பாய் வித் ஸ்ட்ரைப்ட பஜாமஸ் என்ற நாவலே அதே பெயரில் படமாக்கப்பட்டுள்ளது. ப்ருனோ என்ற அந்த சிறுவனின் பார்வையில் இந்த ஹோலோகாஸ்ட் எனப்படும் யூதர்களின் மேல் பாய்ச்சப்படும் வன்முறை, கத்தி இன்றி ரத்தம் இன்றி, மேலும் காட்சிகளால் வலிமையாகக் காட்டபடுகிறது. சிறுவர்களைப் பற்றிய படம் என்பதால், அவர்களும் காணும் வகையில், எந்த வித சித்ரவதைகளும் படத்தில் காட்டாமல், மனதை கனக்க செய்ததில் இயக்குனர் மார்க் ஹெர்மனின்  (Mark Herman) சாமர்த்தியம் பளிச்சிடுகிறது.

படத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடியது, விறுவிறுப்பாக அமைக்கப் பட்டிருக்கும் திரைக்கதை. குறி ஈடுகளால் பல காட்சிகளை புரியவைக்கும் வித்தை, புகைபோக்கியில் வெளிப்படும் புகையில் இருந்து அளவுக்கு அதிகமாக நாற்றம் வருவது குறித்து, வரும் வசனங்கள், (உள்ளே யூதர்களை வைத்து எரித்துக் கொண்டிருக்க,) 'நமக்கு தேவை இல்லாதவற்றை, நாம் எரிக்கிறோம்' என சொல்லும்போது, கொடூர காட்சிகள் எதுவும் இல்லாமல், அந்த ஒரு வசனமே, முதுகு தண்டை சில்லிட வைக்கிறது. தனது கணவன், ஒரு கொடுங்கோலன் என்று தெரிந்த பிறகு, ப்ருநோவின் தாய் தவிக்கும் தவிப்பு, தான் ஒரு ஜெர்மாநியனாக இருந்தபோதிலும், அந்த தவிப்பில் அவளது தாய்மை வெளிப்படுகிறது.

படத்தின் உயிர்நாடியே ப்ருநோவாக நடித்திருக்கும் ஆசா பட்டர்ப்ளை என்ற சிறுவனின் நடிப்பு தான். அந்த குட்டி நீல கண்களில் அவன் காட்டுகிற, ஏக்கம், சோகம், குற்ற உணர்வு, மகிழ்ச்சி, என சாட் சட்டென மாறுகிற பாவனைகள் அற்புதம். ப்ருநோவின் தாயாக வரும் விரா பெர்மிகா, தன கணவனிடம் மாட்டிக்கொண்டு யூதர்களுக்காக தாய்மை உணர்வுடன் பரிந்து பேசும் நடிப்பு அருமை.

பல விருதுகளை வென்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை, கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுடன் கண்டு களியுங்கள்.

The boy in the striped pajamas - 'Oh Boy'




3 comments:

Kumaran said...

இதோ இப்பொழுதே பதிவிறக்கம் செய்கிறேன்..எனக்கு சிறுவர்கள் படமென்றால் மிகவும் பிடிக்கும், தங்களது விமர்சனமே சொல்கிறது நல்ல படமென்று...பார்த்துவிடுகிறேன்..நன்றி,,

Unknown said...

Nice Review...Excellent

Unknown said...

Nice Review...Excellent

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...