Friday, July 16, 2010

ஒரு இந்தியப் பயணம்.-4

இந்தியாவுக்கு  வரும்போதெல்லாம், நான் ஒரு நகரத்தை பார்த்து அஞ்சுவது என்றால் அது சென்னையை கண்டு தான். அதற்க்கு காரணம் அங்குள்ள உஷ்ணம். அமெரிக்காவில் இருந்து இங்கு வந்து ரொம்ப அலட்டிக்கிறான் என நினைப்பவர்களுக்கு... கோவை வாசிகளை கேட்டு பாருங்கள். அங்குள்ள குளிர்ந்த சீதோஷ்ண நிலையில் வாழ்ந்தவர்கள், சென்னை வந்து அதன் காட்டமான தட்பவெட்பம் கண்டு அஞ்சவே செய்வார்கள். நானும் கோயமுத்தூர் காரன் தான். இந்த முறை சற்று அதிகமாகவே சூடு. நூற்றி ஐந்து டிகிரி கொளுத்தி தள்ளியது. ஐந்தடி நடந்தாலே சட்டை எல்லாம் வியர்வையில் நனைந்து போனது. இம்முறை உலகெங்கிலுமே சூடு மிக அதிகம் என படித்திருந்தேன். இந்தியாவில் தான் அப்படி என்றால், இங்கு அமெரிக்க வந்த பிறகும் வெய்யில் நூறு டிகிரியை விட்டு இறங்க மாட்டேன் என்கிறது. ஒசோன் லேயரில் ஓட்டை விழுந்ததை காரணமாக சொல்கிறார்கள்.

எனினும் சென்னை அழகாக மாறி இருந்தது. முன்பை விட அதிக சுத்தமாக இருந்தது. எங்கெங்கும் மேம்பாலங்கள்.பல திறக்கப் படாமல்.. சில கட்டி முடிக்கப் படாமல்...
உயர்ந்த கட்டிடங்கள்...நல்ல சாலைகள் என வெகுவாக உருமாறி இருந்தது. எனினும்... டிராபிக் மிக அதிகம். இரண்டு சக்கர வாகனங்களை விட இப்போது அதிகமாக நான்கு சக்கர வாகனங்கள் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன.

என் மனைவி ஸ்பென்சர்ஸ் பார்க்கவேண்டும் என விரும்பியதால், ஸ்பென்சர்ஸ் சென்றோம். முன்பு இருந்த சுத்தமும் அழகும் இப்போது இல்லை.. மிக மிக நெரிசலாக உரு மாறி இருந்தது. அங்கு எனது நண்பனை வர சொல்லி இருந்தேன்.

                                                              ஸ்பென்சர் பிளாசா 
போலாரிஸ் லாப்சில் வேலை பார்க்கும் அவன் ஸ்பென்சர்ஸ் வந்தபோது இருவரும் கட்டி தழுவிக் கொண்டோம். ஆம். பதினாறு வருடங்கள் கழித்து அவனைப் பார்க்கிறேன். திருச்சி செயிட் ஜோசப்ஸ் கல்லூரியில் படித்த பொது, நாங்கள் அடித்த கூத்து கொஞ்சம் நஞ்சம் இல்லை. கல்லூரியில் விடுதியில் வேறு வேறு அறைகளில் தங்கி இருந்தபோதும்.. வேறு வேறு வகுப்புகள் படித்த  போதும்...எட்டு பேர் கொண்ட எங்கள் நண்பர் பட்டாளம் அடித்த கூத்துகளுக்கு அளவே இல்லை. ஒன்றாக உண்டு, ஒன்றாக உறங்கி, ஒன்றாக சைட் அடித்து (வெள்ளிகிழமைகளில் தாவணி பெண்களை பார்க்க அனைவரும் மலைக்கோட்டை கோயில்  சென்று அமர்ந்திருப்போம்). ஒன்றாக திரைப்படங்கள் சென்று... ஒன்றாக கலாய்த்து...என ஒன்றாகவே திரிந்த காலம் அது.பின்னர் எல்லோரும் வெவ்வேறு திசைகளில் பயணப்பட்டாலும்   அவ்வப்போது ஒரு மின்னஞ்சல் என எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

இம்முறை என் நண்பன்  சென்னையில் இருந்ததால், அவனை சந்திப்பது என ஏற்பாடாயிற்று. என்னை மதிய உணவுக்கு ஹோட்டல்க்கு அழைத்து செல்வதாக கூறி இருந்தான். நானோ இலை போட்டு சாப்பாடு போடும்  ஒரு சிறந்த சைவ உணவகத்துக்கு அழைத்து செல்லுமாறு கூற அவன் தனது காரில் அழைத்து சென்று நிறுத்தியது ரெசிடென்சி ஹோட்டலில். அங்கு தெரிந்த பணக்காரத்தனம் என்னை மிரள வைத்தது. அந்த உணவகத்து பரிமாறுபவர்கள்.. பஞ்சக்கச்சம் அணிந்து பழுப்பு நிறத்தில் சட்டை அணிந்திருந்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசினார்கள். எனது நண்பனும் அவர்களிடம் அதே நுனி நாக்கு ஆங்கிலத்தில் கதைக்க நான் தேமே என அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மகாராஜாக்கள் அந்த காலத் சினிமாக்களில் அமர்ந்திருப்பதை போல திண்டுகள் வைத்து இருந்தனர். படுக்கையை பார்த்ததும் என் மகன் வழக்கம் போல அதில் ஏறி குதிக்க ஆரம்பித்தான்.

'ரொம்ப காஞ்சி பொய் வந்திருப்பீங்க. நீங்க சாப்பிடுங்க நான் பையன பாத்துக்கறேன்' என அவன் என் மகனோடு விளையாட ஆரம்பித்தான்.

இலை போலவே இருந்த வெள்ளி தட்டின் மேல் அதே வடிவத்தில் இலையை வெட்டி வைத்து அதன் மேல் சாப்பாடு பரிமாறினார்கள். ஸ்பூன் டம்ளர் என அனைத்துமே வெள்ளி. சாப்பாடு பிரமாதம். வட்ற்றல் குழம்பு சாம்பார், மோர் குழம்பு ரசம்..புளி சாதம், தயிர் சாதம்.. நான்கு வகைப் போரியல், அப்பளம் கூட்டு என எனது கனவு சாப்பாடு என் கண்முன்னே விரிய விரிய அனைத்தும் ஒரு கை பார்த்தேன். 

அவன் அவனது காரில் கொண்டு வந்து எங்கள் வீட்டில் விட்டு டாடா காட்டியபோது...  . பெரிய கம்பனியில் பெரிய வேலையில் கை நிறைய சம்பாதித்தாலும்.. கல்லூரி காலங்களில் நாங்கள் படித்தபோது எங்கள் வீடுகளில் இருந்து வரும் மணி ஆர்டர்களுக்கு காத்திருந்தபோதும எந்த எதிர்பார்ப்பும இன்றி வளர்ந்த எங்கள் நட்பு  எங்களுக்குள் இருந்த பிணைப்பு, தற்போது எங்களுக்கென்று ஒரு தனி வாழ்க்கை, தனி குடும்பம் என  உருவாகி நாங்கள் மீண்டும் சந்தித்தபோது, கால ஓட்டத்தில்  எங்கேயோ அறுந்து போனதை போல உணர்ந்தேன்.

(பயணம் தொடரும்...)
--

3 comments:

வடுவூர் குமார் said...

4 ச‌க்க‌ர‌ வாக‌ன‌ம் பெருகி இந்திய‌ சாலைக‌ள் திண‌ற‌ப்போகின்ற‌ன‌.

NILAMUKILAN said...

உண்மை தான் குமார். ஏற்கனவே அப்படித்தான் இருக்கிறது..

Rajasubramanian S said...

வாழ்க்கைப் பயணமே இப்படித்தான். டிரைடன் சொன்னதுபோல் To meet,to love and then to part is the sad tale of many a human heart.எது ஒன்றுமே அதை இழந்தபின்னர்தான் சிறப்பாகத்தோன்றும்.குடும்பம்,உறவினர் எல்லாமும் அப்படித்தான்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...