Wednesday, November 18, 2009

சுட்டிப்பெண் டோரா பிறந்த கதை.


உங்கள் வீடு, எங்கள் வீடு, அடுத்த வீடு, ஏன், உலகில் உள்ள அத்தனை குழந்தைகளையும் கொள்ளை கொண்ட சுட்டிப்பெண் தான் டோரா. தொலைக்காட்சி பெட்டிகள், வீட்டுக்கு வீடு முளைத்து விட்ட பின், தொலைக்காட்சி தொடர்கள், அருவருப்பான நடன அசைவுகள் கொண்ட சினிமா பாடல்கள் என வீட்டின் வரவேற்ப்பு அறைகளை ஆக்ரமித்த்துக் கொண்டு குட்டி குழந்தைகளை கலாசார சீரழிவுகளுக்கு இட்டு செல்லாமல் காப்பது, குழந்தைகளுக்கான சானல்கள்தான்.

கண்களை உருட்டி பார்க்கும் அந்த பெரிய விழிகளும், நேர்த்தியாக வாரப்பட்ட தலை முடியும், டோரா வின் கண்டுபிடிப்புகளும், சிறியவர்களை மட்டுமல்ல. பெரியவர்களையும் கட்டிபோட்ட சுதந்திரம் டோராவிற்க்கே உண்டு. இன்று மேற்கத்திய நாடுகளில் உள்ள குழந்தைகளிடம்,
'வருகிற பிறந்த நாளன்று என்ன வேண்டும்?' என கேட்டால், உடனே, 'டோரா பொம்மை, டோரா பை, டோரா பேனா' என டோராவை சம்பந்தப்படுத்தியே கோரிக்கைகள் வருகின்றன. டோரா பெண்ணாக இருப்பதால், டோராவை ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் மிக அதிகமாக நேசிக்கிறார்கள். எனவே நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், ஆண் குழந்தைகளை கவர, டோராவிற்கு ஒரு ஒன்று விட்ட சகோதரன் டியாகோ என ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி உலவ விட, அந்த கதாபாத்திரமும் பெரிய அளவில் ஹிட்அடித்திருக்கிறது.

மூளையை மழுங்கடிக்க வைக்கும் மாயஜால கதைகள் இல்லை. அதிகப்ரசங்கித்தனமான வேலைகளை குழந்தைகளை இந்த தொடரில் செய்வது இல்லை. குழந்தைகள் என்ன செய்யுமோ அதையே தான் இந்த கார்டூன் கதாபாத்திரங்களும் செய்கின்றன. போகிற போக்கில், குழந்தைகளுக்கு எண்கள், வண்ணங்கள்,மலர்கள்,பழங்கள் என சொல்லி கொடுக்கிறார்கள். நற்பண்புகளை நாசூக்காக போதிக்கிறார்கள். கதையோடு கூடி டோரா கேள்விகள் கேட்கிறாள். அதற்க்கு, பதில்களை கூறுகிறார்கள், தொடரை பார்க்கும் குட்டிகள். உதாரணமாக, டோரா ஒரு ஆபிள் தோட்டத்தை கடந்து செல்கிறாள். அங்கு நான்கு மரங்கள் இருக்கின்றன. இந்த தோட்டத்தில் எவ்வளவு மரங்கள் இருக்கின்றன என கேட்கிறாள் டோரா. உடனே மரங்களை எண்ண தொடரை பார்க்கும் குட்டிகளிடையே போட்டி நடக்கிறது யார் முதலில் சொல்வதென்று. நான்கு என கூறவும் டோரா ஒவ்வொரு மரமாக எண்ணி காண்பிக்கிறாள். பெரியவர்களுக்கு இது போர் அடித்தாலும், குழந்தைகள் தொலைகாட்சியில் டோராவின் தொடரை பார்த்தே பல நல்ல விஷயங்கள் கத்துக்கொள்வது நன்மை தானே?.

சரி உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கொண்டாடும் டோரா எப்போது, எங்கே பிறந்தாள்?.


அதற்க்கு நாம் கால இயந்திரத்தில் ஏறி பின்னோக்கி 1997 போகவேண்டும்.

1997 டிசம்பரில், அமெரிக்காவில் உள்ள நிகேலோடியன் என்ற குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிறுவனத்தில் அதிகாரிகள் ஒன்று கூடி, புதிதாக குழந்தைகளை கவரும்படி நிகச்சிகள் தயாரிக்கவேண்டும் என தனது சக நிர்வாகிகளின் படைப்பு திறனை சோதித்து பார்த்தனர். எவ்வளவோ பேர் சொன்ன கருத்துகள் அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. எல்லாம் ஏற்கனவே வந்தவையாக இருந்தன. அல்லது குழந்தைகளுக்கு போர் அடிக்கும் நிகழ்ச்சியாக இருந்தன. திரைப்பட கல்லூரியில் படித்து கொண்டு பகுதி நேரம் அந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை பார்த்த வால்ஷ் என்ற பெண்மணி, தானும் இன்னொரு சக ஊழியனான க்றிஸ் கிப்போர்ட் இருவரும் சேர்ந்து, ஒரு சின்னப்பெண் கதாநாயகியாக நடிக்க குழந்தைகளுடன் நேருக்கு நேர் உரையாடும் வகையில்,குழந்தைகளின் மூளையை வேலை செய்ய வைக்க,அவர்களுடன் ஒவ்வொரு காட்சியிலும் பேசி நடிக்கும் ஒரு காதாபாத்திரம் கொண்ட ஒரு ஐடியா வைத்திருப்பதாக சொல்ல, ஆர்வமானது நிர்வாகம்.


பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான இண்டராக்டிவ் தொடராக உருவாகும் எண்ணம் உருவானது. நிர்வாகிகளும், வால்ஷ் மற்றும் கிரீஸ் இருவரும் ஒரு சிறிய படம் ஒன்று எடுத்து தருமாறு பணித்தது.வால்ஷ் மற்றும் க்றிஸ் இருவரும் உக்காந்து யோசிக்க.... பின்வரும் திட்டங்களை உருவாக்கினர்.


1. டோரா எங்காவது பயணம் செய்தபடி இருக்க வேண்டும்.

2. ஒவ்வொரு கதையிலும் டோராவுக்கு ஏதாவது ஒன்றை அடைய வேண்டும் என்ற இலக்கு இருக்க வேண்டும்.

3. குழந்தைகளுக்கான நேருக்கு நேர் கேள்வி பதில் பாணியில் குழந்தைகள் தெரிந்துகொள்ள நிறைய விஷயங்கள் இருக்க வேண்டும்.

4. குழந்தைகளுக்கு அவரகளது கதையை நேரில் பார்ப்பதை போன்ற அனுபவம் வேண்டும். அவர்கள் அன்றாடும் சந்திக்கும் நிகழ்வுகள் காட்சிகளில் தெரிய வேண்டும்.

5. டோரா ஒரு திடமான, தைரியமான, அறிவான சுட்டி குழந்தையாக இருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு விளம்பர ஓவியர் ஹெலேனாவிடம் இவர்கள் சொல்ல சொல்ல, அவர் தனது கணவனின் துணை கொண்டு நாம் இப்போது திரையில் பார்க்கும் டோராவை உருவாக்கினார். முதலில் எல் கே ஜி படித்து கொண்டிருந்த ஹெலேனாவின் குழந்தைக்கு டோராவை காட்ட அக்குழந்தைக்கு மிகவும் பிடித்துப் போனது. ஐந்து முதல் ஏழு வயதுள்ள குழந்தைகளை சோதித்து கடைசியில் கத்லீன் ஹீர்லிஸ் என்ற குட்டிபெண்ணின் குரல் டோராவின் குரலானது.1998 இல் டோராவின் குட்டி படம் தயாரானது. முதலில் நான்கு முதல் எட்டு வயது வரை உள்ள குழந்தைகளை பிடித்து படத்தை பார்க்க வைத்தார்கள். அவர்கள் அனைவரும் குதூகலத்துடன் டோராவை கொண்டாட ஆரம்பித்தனர். அன்றே தெரிந்து விட்டது நிகேலோடியன் ஊழியர்களுக்கு. டோரா ஒரு மாபெரும் சக்தியாக வளரப் போகிறாள்என்று.ஏப்ரல் 1999 இல் டோரா முதன் முதலில் தொலைகாட்சியில் தோன்றினாள். டோராவை காட்டியே சாதம் ஊட்டிய தாய்மார் பலர். (நிலா காட்டி சோறு ஓடின காலம் எல்லாம் மலை ஏறி போச்சி.) தங்கள் குழந்தை போஷாக்காக வளர காரணம் டோரா என்றனர். டோராவின் பொம்மைகள், டோராவின் பள்ளி பைகள், டோராவின் உடை போல உடைகள், டோராவின் சிகை அலங்காரம், என பலரும் கல்லா கட்ட ஆரம்பித்தனர். டோரா பெண்ணாக இருக்கிறாள் ஆம்பிளை பசங்களான எங்களுக்கும் ஒரு கதாபாத்திரம் வேண்டும் என நினைத்த குட்டி பசங்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்ய, டியாகோ என்ற டோராவின் ஒன்று விட்ட சகோதரனின் பாத்திரம் உருவாக்கப் பட்டது. குழந்தைகளுக்கு நேரப்போக்கு மட்டும் அன்றி அறிவு வளர்ச்சிக்கும் டோரா தொடர் உத்தரவாதம் அளிப்பதால் தான், இன்றும் டாப்பில் இருக்கிறாள்டோரா.

இதில் நிகிலோடியன் எடுத்த முயற்சி பாரட்டத்தகும். எடுத்தேன் கவிழ்த்தேன் என குழந்தைகள் தொடரை வெறும் பூதம் மற்றும் அதிகப்ரசங்கிதனம் காட்டி தொடர் எடுக்கும் நம்மவர்கள், குழந்தைகளோடு குழந்தையாக இருந்து அவர்களின் உலகை புரிந்து கொண்டு ஆய்வு செய்து களத்தில் இறங்கினால் நல்ல குழந்தைகள் தொடர் தமிழிலும் உருவாக சாத்தியம்உண்டு.

2 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

super டோரா கதையைப் பத்திய இந்த கட்டுரை நல்லா இருக்கு..
என் பொண்ணு 1998 ல தான் பிறந்தா.. அவ ஒன்றரை வயசுல இருந்து டோரா பாப்பா .. அப்ப அது இங்க்லீஷ் டு ஸ்பானிஷ் சொல்லிக்குடுத்ஹ்டுச்சு அதான் பாத்துட்டிருந்தோம்.. இப்ப ஹிந்தி டு இங்க்லிஷ் சொல்லிக்குடுக்குது.. என் பையனுகு ரெண்டு குட்டீசையும் பிடிக்கும்

NILAMUKILAN said...

உங்க பொண்ணு பேரு டோராவா? பசங்களுக்கு டோராவையும் தியாகோவையும் பிடிக்காம இருக்குமா?
உங்கள் வருகைக்கும் கருத்தும் நன்றிங்க.அடிக்கடி வாங்க.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...