Saturday, November 27, 2010

உலக சினிமா: அம்ரீக்கா (அரபிக்)

ஒரு மதத்தை சார்ந்தவன் ஏதாவது ஒரு பயங்கரவாத செயலில் ஈடுபட்டால், அம்மதத்தை சார்ந்த அனைவருமே, பயங்கர வாதிகள் என முத்திரை குத்தப்படுவதும் அதனை அரசியல் சக்திகள் ஊதி ஊதி பெரியதாக்குவதும் நாம் அனைவரும் கண்ட ஒன்று. அதே மதத்தை சார்ந்த, குற்றங்கள் அறியாதவர்களும் பலிகடாக்கள் ஆக்க படுவதை நாம் காண்கிறோம். ஒசாமா என்ற ஒரு தீவிர வாதி ஒரு அரபிக் என்பதால், அனைத்து அரபியர்களும் தீவிரவாதிகள் என பார்க்கும் மனோபாவம் அமெரிக்காவில் அதிகரித்துள்ளது. அரபியர்களோ இஸ்லாமியர்களோ தங்கள் நாடுகள் வரும்போது அவர்களை பரிசோதிக்க கூடுதல் கவனமும் இமிக்ராஷன் பகுதியில் எடுத்துக் கொள்ளப்படும்.

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் ஒரு வங்கியில் நல்ல வேலையில் இருப்பவள் முன்னா. அவளுடைய மகன் க்பாட்டி. முன்னா குண்டாக இருப்பதால், அவளை விவாகரத்து செய்துவிட்டு அழகான ஒரு யுவதியுடன் வாழ்க்கை நடத்துகிறான் அவள் கணவன். ஒவ்வொரு முறை தன அலுவலகத்தில் இருந்து இல்லம் திரும்பும்போது  ராணுவத்தின்  ஏகப்பட்ட பரிசோதனைகள். எங்கே தன மகனும் இந்த பாலைவனத்தில் கிடந்தே அல்லல் பட போகிறானோ என அவள் வருத்தமுற்று இருந்த சமயத்தில், அவள் எப்போதோ அமெரிக்க விசாவிற்கு மனு  போட்டிருக்க, அப்போது அவளுக்கு கிடைக்கிறது.. தாயும் மகனும் அம்ரீக்காவிற்கு பயணப்படுகிறார்கள்.(அரபிக்கில் அமெரிக்காவைத்தான் அம்ரீக்கா என சொல்கிறார்கள்)

மூன்று மணி நேர விசாரணை மற்றும் பரிசோதனைக்கு பின்னர், வெளியே வரும் அவர்களை, முன்னாவின் சகோதரி ரகதா மற்றும் அங்கு மருத்துவனாக இருக்கும் அவள் கணவன் நபீல், தங்களது மூன்று குழந்தைகளுடன் தங்கள் குடும்பத்தில் சேர்த்துக் கொள்கின்றனர்.



தனது பத்து வருட வங்கி வேலை அனுபவத்தில் எளிதாக வேலை கிடைத்துவிடும் என கனவில் இருக்கும் முன்னாவிற்கு வைட் காசில் என்கிற ஒரு துரித உணவகத்தில் பணியாளர் வேலை மட்டுமே கிடைக்கிறது. தனது அறிவாளியான மகன் க்பாடியை அங்குள்ள ஒரு நல்ல பள்ளியில் சேர்க்கிறாள். க்பாடியோ பாலஸ்தீனத்தை சேர்ந்தவன் என்பதால், அவனை எல்லோரும் ஒசாமா என எள்ளி நகையாடுகிறார்கள். முன்னாவின், சகோதரி ரகதாவுக்கோ, அம்ரீக்காவில் இருக்க பிடிக்க வில்லை. தனது சொந்த ஊருக்கு போக அவள் துடிக்கிறாள். அப்போது அமெரிக்கா சதாம் உசேன் நாடாண்டு கொண்டிருந்த இராக்கின் மீது போர் தொடுக்கிறது. மருத்துவனான நபீல் ஒரு அரபியன் என்பதால் அவனிடம் நோயாளிகளின் வரவு குறைந்து விடுகிறது. இதன் மூலம் அந்த குடும்பத்தின் நிம்மதி குலைந்து போகிறது. க்பாட்டி அமெரிக்கனாக மாறி தனது அம்மாவை மதிக்க மறுக்கிறான். சக மாணவர்கள் தன்னை அன்னியமாக பார்ப்பதால் அவனுக்கு அவர்களிடம் பிணக்கு வருகிறது.நிம்மதியாக இருந்த பாலஸ்தீன வாழ்கையை விட... அமெரிக்காவில் தாங்கள் அகதிகளாக உணர்கிறார்கள்.
 


வேறொரு நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயரும் மக்களின் துயரை அருமையாக சொல்லி இருக்கிறது படம். முன்னாவாக நடித்திருக்கும் நிஸ் ரீன் பௌர், மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறாள். தனக்கு என்ன கஷ்டம் இருந்தாலும், மற்றவரிடம் அன்பை வெளிப்படுத்தும் இடங்களிலும், தனது மகன் சிறிது சிறிதாக தன்னை விட்டு விலகிப் போவதை கண்டு கண்ணீர் வடிப்பதும் என கலக்கி எடுத்திருக்கிறார். இது ஒரு அரபி படம் என்பதால் தான் அவருக்கு ஆஸ்கார் கிடைக்கவில்லை என நான் நினைக்கிறேன்.

ஒரு சிக்கலான கதையை எடுத்துக் கொண்டு, அதிக செலவு இல்லாமல், மனித உணர்வுகளுடன் விளையாடி இருக்கிறார், திரைக்கதை மற்றும் இயக்கத்தை கையாண்டிருக்கும் பெண் இயக்குனர் செரியன் டபிஸ். சோகத்தை கசக்கி பிழியாமல், படம் முழுவதும் கருப்பு நகைச்சுவையை இழையோட விட்டு, படம் ராக்கெட் வேகத்தில் பயணிப்பதற்கு இவரது இருகப்பற்றும் திரைக்கதையே முக்கிய காரணி. படத்தில் அமெரிக்காவை குற்றம் சொல்லிக்கொண்டு இருக்காமல் அதன் பாசிடிவ் பக்கத்தையும் காட்டி, ஒரு அருமையான படத்தை அளித்த அவருக்கு ஒரு ராயல் சல்யுட்.

ரகதாவின் வீடு, அவள் குடும்பம், வைட் காஸ்டல் உணவகம், க்பாடின் பள்ளி. அவ்வளவுதான் படத்தின் கதை நடக்கும் இடங்கள் என அதிகம் செலவுக்கு வழி வகுக்காமல் குறைந்த செலவில் நிறைவான் படத்தை அளித்துள்ளார் தயாரிப்பாளர்.

படத்தில், வேறொரு நாட்டில் இருந்து அமெரிக்கா வந்து வாழ்பவர்களை பற்றி ரகதா சொல்லும் அந்த வசனம் மிகவும் பிடித்தது.
'ஒரு மரத்தை ஒரு இடத்தில் இருந்து பிடுங்கி, இன்னொரு இடத்தில் நட்டு வைத்தால், அது முன்பை போலவே வளருமா.. அதன் வேர்களை தேடாதா?'.


மிக கௌரவமான  கான் திரைப்பட விருதுகள், சண் டான்ஸ் திரைப்பட விருதுகள்,  என அள்ளி குவித்துள்ளது இந்த திரைப்படம். 

வாழ்க்கையை பாசிடிவாக மாற்றி மற்றவர்களை மகிழ்விக்கும் முன்னாவின் புன்னகைக்காகவே இந்த திரைப்படத்தை இரண்டு முறை பார்த்தேன்.

அம்ரீக்கா--அருமை.

7 comments:

ABDUL RAHMAN said...

சமுகம் சார்ந்த அருமையான பதிவு . சகோதரர்க்கு வாழ்த்துக்கள்

ABDUL RAHMAN said...

சமுகம் சார்ந்த அருமையான பதிவு . சகோதரர்க்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

அருமையான பதிவு . சகோதரர்க்கு வாழ்த்துக்கள்

அருண் பிரசாத் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்....

http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_04.html


நன்றி

NILAMUKILAN said...

நன்றி அப்துல்.

NILAMUKILAN said...

நன்றி அனானி.

NILAMUKILAN said...

உங்கள் அன்புக்கு நன்றி அருண் பிரசாத்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...