Sunday, April 18, 2010

திரைப்படம்: அனுரணன் (வங்காளம்)-உருக்கும் காதல்!





வங்காளம், உலகின் சிறந்த இயக்குனர் மற்றும் கவிஞரை நம் தேசத்திற்கு அளித்துள்ளது. இந்தியாவின் சிறந்த பத்து இயக்குனர்களை பட்டியலிட சொன்னால் அதில் நிச்சயம் சத்யஜித் ரே, ஷ்யாம் பெனேகல், ரிதுபர்ன கோஷ், அபர்ணா சென் என முக்கால் வாசி இடத்தை வங்காளியர் நிரப்பிக் கொள்வர். அந்த வங்காள மொழியில் வெளி வந்து சென்ற வருடத்திற்கான சிறந்த திரைப்படம் விருதினை வாங்கிய அனுரணன் திரைப்படம் காணக் கிடைத்தது.

நம் தமிழின் மௌன ராகத்திற்கு பிறகு, கணவன் மனைவியருக்குள் நடக்கும் நுண்ணிய உணர்வுகளை படம் பிடித்து காட்டி இருக்கும் படம் என்னை பொறுத்தவரையில் இதுவே. இரண்டு கணவன் மனைவியரின் வாழ்க்கையை சுற்றியே படம் முழுக்க சுழல்கிறது. என்றாலும், அவர்களது ஏக்கங்கள், அவர்களது விருப்பங்கள், பிரச்சனைகளை கையாளும் யுக்திகள் என அவர்கள் வாழ்கை நுணுக்கமாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது .

ராகுல் சட்டர்ஜி, லண்டனில் ஒரு பெரிய கம்பனியில் ஆர்கிடெக்ட்.அவனது காதல் மனைவி நந்திதா. அவர்களுக்கு ஒரு குழந்தை இறந்து பிறந்தது. அதன் பின்னர் குழந்தை இல்லை. இருந்தாலும் அவர்கள் காதல் மென் மேலும் வளர்கிறது. அவர்களது அன்னியோன்யம், மற்ற கணவன் மனைவியிரடித்தில் பொறாமையை ஏற்ப்படுத்தும். ராகுலின் கம்பனி அவனை கஞ்சஞ்சன்காவில் கட்டும் ஒரு கட்டிட பணிக்காக, கல்கத்தாவுக்கு மாற்றல் செய்கிறது. ராகுலும் நந்திதாவும் இந்தியாவில் வேலை என்பதால், சந்தோஷமாக ஒத்து கொண்டு கல்கத்தா சென்று வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள்.

லண்டனில் வழியில் பார்த்து இருவரும் கல்கத்தா என்பதால் பழக்கம் ஏறபடுத்திக் கொள்கிறார்கள். ராகுலும், சேல்ஸ் மேன்  அமித் பானர்ஜியும். கல்கத்தா வந்த பிறகும் இவர்கள் நட்பு தொடர்கிறது.அமித்தின் மனைவி ப்ரீத்திக்கும் ராகுலுக்கும், தாகூரின் கவிதைகள் இலக்கியம், மற்றும் இயற்கையை ரசிப்பது என பரஸ்பரம் சிந்தனைகள் ஒத்து போகிறது. குழந்தை இல்லா துக்கத்தில் இருக்கும் நந்திதா, ஒரு பள்ளியில் ஆசிரியை யாக வேலை செய்கிறாள். ராகுல் அவ்வப்போது கல்கத்தாவிலிருந்து கஞ்சஞ்சன்காவிற்கு ப்ராஜெக்ட் விஷயமாக சென்று வந்த படி இருக்கிறான்.

எப்போது பார்த்தாலும் பணத்திலேயே குறியாக இருக்கும் அமித் தனது மனைவியை மற்றும் அவளது எண்ணங்களை மதிப்பதில்லை. ராகுலுக்கும் தனக்கும் ரசனை ஒத்து போகிறபடியால், இருவரும் தங்களது இயற்க்கை மற்றும் இலக்கிய ரசனைகளை பரிமாறி கொள்கிறார்கள். 

ஒரு முறை, ராகுல் ப்ரீதியுடன், கஞ்சன்ஜங்கா மழையின் அழகையும், சாயங்கால வேளைகளில் நிலவின் கதிர்கள் பட்டு மலை முகடுகள் தகிக்கும் அழகையும் விவரிக்க அவளுக்கும் அந்த அழகை பார்க்க ஆவல் மேலிடுகிறது.  ஒரு முறை, அமித் அலுவலக விஷயமாக திடீரென லண்டன் கிளம்பி சென்றுவிட, நேரம் போகாத ப்ரீத்தி, கஞ்சஞ்சன்காவிற்கு கிளம்பி செல்கிறாள். அவளை வரவேற்கும் ராகுல், அவளுக்கு கஞ்சன்ஜன்காவின் மலைகளை அதன் அழகை, நிலவின் கதிர்கள் மலைகளின் பட்டு தெறிக்கும் அதிசயங்களை காண்பிக்கிறான். ராகுலின் மனைவியை அறிந்திராத, ஹோட்டல் காரன், அவளை அவனது மனைவி என்று ரெஜிஸ்டரில் பதிகிறான். இருவரும் வேறு வேறு அறைகளில் குட் நைட் சொல்லி தூங்க போகிறார்கள்.

காலை கதிரவனின் கதிர்கள் பட்டு ஜொலிக்கும் மலை பிரதேசங்களை கண்ட ப்ரீத்தி ஓடி சென்று ராகுலின் அறைக்கு சென்று அவனை எழுப்ப, அவன் அன்றைய இரவில் ஏற்பட்ட மாரடைப்பினால் இறந்தது போய் இருக்கிறான். சந்தர்பங்களும் சாட்சியங்களும், ராகுலுக்கும், ப்ரீத்திக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக கிளம்பி விட.. ஒரு புனிதமான நட்பு களங்கப்பட, அமித்தும் ப்ரீத்தியை சந்தேகப்பட, நந்திதா என்ன முடிவு எடுக்க போகிறாள் என நாம் நகம் கடித்தபடி காத்திருக்கிறோம். 

ப்ரீத்தி தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் கிடத்தி இருக்க ஓடோடி சென்று பார்க்கிறாள் நந்திதா... 
'எப்போதும் நான் பறவையாக வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் என் சிறகுகளை சின்ன சின்னதாய் பிய்த்து போட்டு அழகு பார்க்கிறது இந்த சமூகம்' என ப்ரீத்தி கதற...

'அடி லூசு பொண்ணே, சிறகுகள் கொண்டு பறக்க உன்னால் எப்படி முடியும், உன் உணர்வுகளை கொண்டு பற நிச்சயம் நீ பறவையாக உணர்வாய்' என கூறுவதோடு கவிதைத்தனமான முடிவு கொண்டு படம் முடிகிறது.

படத்திற்கு பெரும் பலம், படத்தின் கவிதை நயமுள்ள வசனங்கள். ஒவ்வொரு வசனமும் நம்மை 'அட' போட வைத்துக்கொண்டே இருப்பதற்கு காரணமானவர் வசனகர்த்தா கௌரவ் பாண்டே. கஞ்சன்ஜன்காவின் அழகை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது சுனில் படேலின் அருமையான ஒளிப்பதிவு.

ராகுலாக நடித்திருக்கும் ராகுல் போசின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பும்,நந்திதாவாக நடித்திருக்கும் ரிதுபர்னா சென் குப்தாவின் முகத்தின் உணர்வுகளையும் விட, நந்திதாவாக நடித்துள்ள ரெய்மா சென்னின் கண்களே பாதி வசனங்களை பேசி விடுகிறது.

நமக்கே ராகுல் மீதும் நந்திதா மீதும் சந்தேகம் ஏற்படுத்தும் நோக்கில் காட்சிகள் வைத்தும் அவர்களின் நட்பின் புனித தன்மையை கவிதையாக சொல்லி இருப்பது இயக்குனர் அநிருத்த ராய் சௌதரி இன் திறமை. படம் சிறிது மெதுவாக நகர்ந்தாலும், உணர்வுகளை புரிந்து கொள்ள அந்த தொய்வு அவசியம் தானென தோன்றுகிறது.

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம் என தேசிய விருதுகளை அனுரணன் வாங்கியுள்ளது.

அனுரணன் -கவிதை.

4 comments:

Deepan Mahendran said...

நல்ல விரிவான விமர்சனம்...

க ரா said...

நல்ல விமர்சனம். பகிர்வுக்கு நன்றி.

NILAMUKILAN said...

நன்றி மச்சான்ஸ் சிவா.

NILAMUKILAN said...

நன்றி ராமசாமி கண்ணன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...