Friday, August 1, 2008

பாபேல் - உலக திரைபடங்களில் ஒரு மைல் கல்.

அலேஜன்றோ கோன்சலேஸ் இன்னரிட்டு , ஒரு இச்பன்யோல் இயக்குனர். என்றாலும் சிறந்த இயக்குனர்கள் மொழிக்கு அப்பாற்பட்டவர்கள். அவருடைய முதல் படமான அமெர்ரோஸ் பெர்ரோஸ் படம் கண்டு நான் வியந்து போயிருக்கிறேன். ஒரு சம்பவத்தால் மூவர் பாதிப்பு அடைகிறார்கள். அந்த புள்ளியிலிருந்து அவர்களுடைய கதைகள் தனி தனியாக அச்சம்பவம் நடக்கும் முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை விளக்கும் யுக்தி அதற்க்கு முன்பு வேறு படங்களில் நான் கண்டதில்லை. ( அதே யுக்தியை மணிரத்னம் தனது ஆய்த எழுத்தில் ஈயடிச்சான் காபி செய்திருப்பார்). இன்னரிட்டுவின் முதல் படமாகட்டும் இரண்டாவது படமான இருபத்தொரு கிராம்கள் ஆகட்டும், மனித உறவுகளையும் உணர்வுகளையும் பிழிந்து கொடுக்கும் பணியை செவ்வனே செய்திருந்தன...இட்டுவின் மூன்றவது படமான பாபேல் திரைப்படத்திற்காக நான் ஒரு ரசிகனாக காத்திருந்தேன் என்று தன் சொல்லவேண்டும். அமெரிக்காவில் திரைப்படம் வெளியான நாளிலேயே சென்று பார்த்து விட்டேன். என்றாலும் நேற்று மறுபடியும் குறுந்தகட்டில் பார்த்ததால், இத்திரைப்படத்தை பற்றி எழுதியே ஆக வேண்டும் என்ற வேகம் என்னை உந்தி தள்ளியது.

பாபேல் என்னை ஏமாற்றவில்லை. முதல் இரண்டு படைப்புகளிலும் உள்ள அதே புதுமை, மற்றும் மனித உணர்வுகளால் நெய்யப்பட்ட ஒரு காவியம் பாபேல்.வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மனிதர்களுக்கு ஒரே நேரத்தில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே இத்திரைப்படம். இப்படத்தில் நான்கு கதைகள் ஊடாடி வருகின்றன.
ஒவ்வொரு கதையும் மெல்லிய மனித உறவுகளை அதன் வலியோடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது . இன்னரிட்டுவின் பலமே உறவுகளின் வலியை கூறுவது தான். பாபேலும் அதற்க்கு விதிவிலக்கு அல்ல. இந்த நேரத்தில் கூத்தும் சண்டயுமான நமது தமிழ் படங்களின் தரத்தை நினைத்து பார்க்கிறேன்.

  1. மொராக்கோவில் ஆரம்பிக்கிறது முதல் கதை. ஒரு வயதான கிழவன் ஒரு ஏழை குடியானவனுக்கு ஒரு துப்பாக்கியை விற்கிறான். அந்த ஏழை குடியானவன் ஆடுகளை மேய்த்து அதன் தொலை உரித்து விற்பனை செய்து அதன் மூலம் குடும்பத்தை காப்பாற்றி வருபவன். ஆடுகளை கொன்று தின்னும் ஓநாய்களை விரட்டவே துப்பாக்கி வாங்குகிறான். அவனுடைய இரண்டு பருவ வயது பசங்களிடம் துப்பாக்கியை கொடுத்து ஓநாய்களை விரட்டும்படி பணிக்கின்றான். அவன் இல்லாத நேரம் துப்பாக்கியின் தோட்டாக்கள் எவ்வளவு தூரம் செல்கின்றன என சரி பார்க்க தூரத்தில் வரும் ஒரு ஊர்தியை நோக்கி குறிபார்த்து சுடுகின்றான் இளைய மகன். வேகமாக சென்று கொண்டிருக்கும் ஊர்தி சுட்டவுடன் நிற்கிறது. களேபர குரல்கள் கேட்கின்றன. பயந்து பொய் வீட்டுக்கு ஓடுகிறார்கள் இருவரும். அமெரிக்கா சுற்றுலா பயணியான ஒரு பெண், தீவிரவாதிகளால் சுடப்பட்ட செய்தி நாடு முழுவதும் ஒலிக்கிறது . மொராக்கோ காவலர்கள் இவர்களை கண்டுபிடித்து நெருங்குகிறார்கள் பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது?....
  2. இரண்டு அமெரிக்கா தம்பதியர் மொரோக்கோவில் சுற்றுலா பயணம் மேற்கொள்கின்றனர். அவர்களுக்கும் இருக்கும் சிறு கருத்து வேறுபாடுகளை பகிர்ந்து கொள்கின்றனர். ஊர்தியில் சென்று கொண்டிருகொபோது எங்கிருந்தோ வந்த தொட்ட ஒன்று மனைவியின் தோள்பட்டையை பதம் பார்க்கிறது. அந்த அத்துவான பாலைவனத்தின் அருகே மருத்துவ வசதி எதுவும் இல்லை. அந்த உல்லாச பயணிகளை அழைத்து வந்த வழிகாட்டி தனது ஊரில் ஒரு மருத்துவர் இருக்கிறார் என கூறி அருகாமையில் உள்ள தனது கிராமத்துக்கு கூட்டி செல்கிறான். ஆம்புலன்ஸ் வரும் வரை அந்த சிறிய கிராமத்தில் அந்த சிறிய அறையில் அந்த அமெரிக்கா தம்பதியினர் தங்குகிறார்கள். பதறி பதறிப்போகும் கணவன் மனைவிக்கு மூத்திரம் அள்ளுவது உட்பட அனைத்தும் செய்ய அவர்கள் கருத்து வேறுபாடுகள் காணாமல் போக இருவரும் காதலால் உருகுகிறார்கள். அவர்கள் கதி என்னவானது? அந்த அமெரிக்கா மனைவி பிழைத்தாளா?

  3. பெற்றவர்கள் வேறு ஊருக்கு சென்றிருக்க பிள்ளைகளை பார்த்து கொள்கிறாள் மெக்சிகோ நாட்டை சேர்ந்த நடுத்தரவயது பெண்மணி. அவர்கள் வசிப்பிடம் அமெரிக்காவில். ஊருக்கு சென்றுஇருக்கும் அவர்கள் எதோ பிரச்னையில் மாட்டி கொள்ள தனது சொந்த மகனின் திருமணத்தை காண மெக்சிகோ நாட்டிற்க்கு செல்ல முடியாமல் தவிக்கும் அந்த பெண் குழந்தைகளையும் தன்னோடு திருமணத்துக்கு அழைத்து செல்கிறாள். அவளையும் அவளுடன் அந்த அமெரிக்கா குழந்தைகளையும் கூட்டி செல்கிறான் அவளுடைய மருமகன். நாடு இரவில் அமெரிக்கா திரும்பும் வேலையில் போதையில் இருக்கும் அவன் எல்லை காவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் கூறாததால் (மெக்சிகோ மக்களுடன் எப்படி அமெரிக்கா குழந்தைகள் என்ற சந்தேகம் அவர்களுக்கு) தான் வந்த காரில் அளவுக்கதிகமான போதையுடனும் வேகத்துடனும் பறக்கிறான்.. காவலர்களிடம் தப்பிக்க குறுக்கு பாதையில் வண்டியை செலுத்தி நாடு இரவில் ஒரு அத்துவான காட்டில் அப்பெண்ணையும் குழந்தைகளையும் இறக்கி விட்டபின் காவலர் போனதும் வந்து கூட்டி செல்வதாக கூறி அவ்விடம் இருந்து நகர்கிறான் அவன். அப்பெண் மற்றும் குழந்தைகள் நிலை என்ன?...
  4. காது கேளாத வாய் பேச முடியாத பருவ பணக்கார பெண் தான் உடல் ஊனமுற்றவள் ஆகையால் எந்த இளைஞனும் தன்னை திரும்பி பார்க்க வில்லை என்று தன் மீதே அவளுக்கு கோவம். சுய வெறுப்பின் காரணமாக பிறரை வெறுப்பு ஏற்றும் வகையில் ஆபாசமாக நடந்து கொள்கிறாள் தனது தாய் தற்கொலை செய்து கொள்ள தந்தை வியாபாரத்திலேயே கண்ணாய் இருக்க..இந்தப்பெண் சாய்ந்துகொள்ள யாரும் இன்றி மனம் பிறழ்ந்து போகிறாள். மொரோக்கோவில் நடந்த ஒரு துப்பாகி சூட்டில் அவளுடய தந்தையின் துப்பாக்கி பயன்படுத்தபட்டிருப்பதால் அதனை விசாரிக்க வரும் துப்பறிவாளனுடன் தனது இளமை தாகத்தை தீர்த்து கொள்ள முயல்கிறாள். அவளுடைய நிலைமையை புரிந்து கொண்ட அவன் அவளுக்கு அறிவுரை கூறி செல்கிறான். மனம் ஒடிந்து போன அந்த பெண் என்ன செய்தாள்?

இந்த நான்கு கதைக்கும் உள்ள தொடர்பு இப்பொது புரிந்திருக்குமே...! அந்த மொரோக்கோ சிறுவன் துளைத்த தொட்ட அந்த அமெரிக்க பெண்ணின் தோளை பதம் பார்த்தது. அந்த மெக்சிகோ பெண் பார்த்து கொண்ட குழந்தைகள் இந்த அமெரிக்கா தம்பதியுடயது. அந்த சிறுவர்களின் துப்பாக்கிக்கு சொந்தகாரர் அந்த ஜப்பானிய வியாபாரி.

திரைப்படம் முடியும் வேளையில் நான்கு கதைகளும் எவ்வாறு ஒன்றுகொன்று தொடர்புடையது என்பது எளிதாய் விளங்கும்..
இன்னரிட்டுவின் அனைத்து படங்களுக்கும் திரைக்கதை எழுதி இருப்பவர் குவில்லேர்மோ அர்ரியாக (guillermo arriaga).
அமெரிக்கா தம்பதியாக நடித்திருக்கும் பிராட் பிட் மற்றும் காத் ப்லான்சே இருவரும் ஹாலிவுடின் பெயர் பெற்ற நடிகர்கள். இருந்தாலும் பிராட் பிட் நடித்ததிலேயே சிறந்த படம் இதுவே என நான் கூறுவேன்..
ஆஸ்கார் விருதுகளுக்கு ஏழு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு சிறந்த இசைக்கு மட்டும் விருது பெற்ற இப்படம்.. ஆஸ்கார் விருதுகளின் அளவு கோள்களை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இன்னரிட்டுவின் அடுத்த படைப்பிற்காக காத்திருக்கிறேன்.

3 comments:

Subash said...

அருமையான விமர்சனம்.
இந்தப்படம் நீண்ட காலமாக இருக்கிறது. இன்னும் பார்க்கவில்லை. விரைவில் பார்த்துவிடுகிறேன்.
மிக்க நன்றி

NILAMUKILAN said...

நன்றி சுபாஷ். இன்னரிட்டுவின் 21 கிராம்ஸ் மற்றும் அமோறேஸ் பெரோஸ் ஆகிய படங்களையும் பரிந்துரை செய்கின்றேன்.

கானகம் said...

மிக நன்றாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள்.. நானும் பார்த்தேன். ஆரம்ப கட்ட குழப்பங்களை மட்டும் கொஞ்சம் பொறுமையாக தாண்டினால் ஒரு அற்புதமான சினிமாவை ரசிக்கலாம். கிட்டத்தட்ட பாலைவனம் போல இருக்கும் இடத்தில் குழந்தைகளை விட்டுவிட்டு தண்ணீர் கொண்டுவர செல்லும்போது எனக்கு கிட்டத்தட்ட வெறியே வந்துவிட்டது. அந்த வேலைக்காரப்பெண்ணின் நடிப்பும் அருமை..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...