Tuesday, March 2, 2010

உலக சினிமா: லைவ் பிளஷ் (LIVE FLESH)


பெட்ரோ அல்மதோவரின் லைவ் பிளஷ் என்ற திரைப்படம் காணக் கிடைத்தது. டாக் டு ஹேர் என்ற அவரது அற்புதமான திரைப்படத்தை கண்டு ரசித்த நான் அதே முனைப்பில் இந்த திரைப்படத்தையும் அவருக்காகவே பார்த்தேன்.

தனது மனைவிகளின் மேல் உயிரையே வைத்திருக்கும் இரண்டு கணவர்கள், அவர்களுக்கு துரோகம் செய்யும் இரு மனைவிகள் என்ற ஒரு வித்யாசமான கதைக் களம். கணவர்களுக்கு இருக்கும் காதலை மிக அழகாக சொல்லும் பெட்ரோ.. தங்கள் கணவர்களுக்கு மனைவிகள் செய்யும் துரோகங்களையும் நியாயப் படுத்த முனைந்திருக்கிறார்.

ஒரு நள்ளிரவில் பிரசவத்தில் துடிக்கும் ஒரு தாய்க்கு ஆஸ்பத்திரிக்கு போகும் வழியில் பஸ்சில் பிறக்கிறான் விக்டர். அவன் பஸ்சில் பிறப்பதால் அவன் சாகும்வரை பஸ்சில் செல்ல அவனுக்கு இலவச பாஸ் வழங்கப் படுகிறது.

இருபது வருடங்கள் கழித்து, காவல் துறையில் வேலை செய்யும் டேவிட் மற்றும் சன்சோ ஒரு காரில் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் போது அளவுக்கு அதிகமாக குடிக்கும் சன்சோ, தான் தனது மனைவி க்ளாராவின் மீது உயிரையே வைத்திருப்பதாகவும் ஆனால் அவள் தனக்கு துரோகம் செய்வதை அறிவதாகவும் டேவிட் இடம் புலம்பி குடித்து தள்ளுகிறான் சன்சோ. அதற்க்கு டேவிட், அவன் அளவுக்கு அதிகமாக குடிப்பதாலேயே அவனது மனைவிக்கு அவனை பிடிக்காமல் போய் இருக்க கூடும் என அவனுக்கு அறிவுரை சொல்ல, அவள் அவ்வாறு இருப்பதாலேயே தான் குடிப்பதாக வாதிடுகிறான் சான்சோ.

அதே நேரம் வாலிபனான விக்டர் தான் சென்ற வாரம் டேட்டிங் செய்த ஏலேனாவின் வீடு தேடி வந்து தன்னுடன் படுக்குமாறு கூற அவனது ஆண்மையை அவமதிக்கிறாள் எலேனா. அவள் துப்பாக்கியை எடுத்து வந்து உடனே வீட்டை விட்டு வெளியேறுமாறு கூற அவளது கையை பிடிக்கும் விக்டர் அவளை பிடித்து தள்ள அந்த அதிர்ச்சியில் துப்பாக்கி வெடிக்க அவள் மூர்ச்சை அடைகிறாள். அப்போது தொலைக்காட்சி பெட்டியில் எதோ ஒரு சண்டை படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

எனினும் பயந்து போன பக்கத்து வீட்டுக்காரி போலிசை அழைக்க, அந்த அழைப்பு காரில் சுற்றி கொண்டிருக்கும் டேவிட் மற்றும் சந்சொவின் வயர்லஸ் க்கு வர அவர்கள் அந்த கட்டிடம் நோக்கி விரைகிறார்கள். அப்போது விழித்துக் கொள்ளும் எலேனா விக்டரை வெளியே செல்லுமாறு கூற இருவரும் விளையாட்டு தனமாக கட்டி கொண்டு சண்டை போட அதனை வெளியே இருந்து கவனிக்கும் டேவிட் மற்றும் சந்செஸ், விக்டர் ஏலேனாவை கற்பழிக்க முயல்வதாக நினைத்துக் கொண்டு வீட்டினுள் துப்பாக்கி உடன் பாய்கிறார்கள். ஏலேனாவை காப்பாற்றும் டேவிட், குடி போதையில் இருக்கும் சந்செஸ் ஐ அமைதியாக இருக்கும்படி கூற, சந்செஸ்சோ பாய்ந்து விக்டரிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயல, எக்கு தப்பாக துப்பாக்கி வெடித்து டேவிட்டை காயப்படுத்துகிறது.


துப்பாக்கியின் விசையை இழுத்த விக்டர் சிறையில் அடைக்கப் படுகிறான்.டேவிட் க்கு குண்டு அடி பட்டதால், அவனது இடுப்புக்கு கீழ் செயல் இழந்து போகிறது. எனினும் தன்னை காப்பாற்றிய டேவிடை மணந்து கொள்கிறாள் எலேனா.

நாலு வருடம் கழித்து விக்டர் சிறையில் இருந்து வெளியே வரும்போது டேவிட் ஊனமுற்றோருக்கான கூடைபந்து போட்டியில் ஒரு நட்சத்திர வீரனாக மின்னுகிறான். தன்னை சிறையில் தள்ளிய அவனை பழி தீர்க்க நேரம் பார்த்து கொண்டிருக்கிறான். சந்செசின் மனைவி கிளாராவை மயக்கி அவளை உபயோகப் படுத்திக் கொள்கிறான். தன்னை அடித்து கொடுமை படுத்தும் கணவனான சான்செசை பழி வாங்க கிளாரா விக்டரை உபயோகப் படுத்திக் கொள்கிறாள்.

இடையில் அவனால் தனது மனைவி ஏலேனாவிற்கு ஆபத்து வர கூடும் என பயந்து விக்டரை எச்சரிக்கிறான் டேவிட். அவனை தொடர்ந்து சென்று அவனுக்கும் கிளாராவிற்க்கும் தொடர்பு இருப்பதை கண்டு பிடித்து புகைப்படங்கள் எடுத்து வைத்து கொள்கிறான். எலேனா நடத்தும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான விடுதியில் சேர்கிறான் விக்டர். ஏலேனாவின் வேலைகள் கண்டு அவளை பழி வாங்குவதை கை விடுகிறான் விக்டர். அவன் ஏலேனாவின் விடுதியில் வேலை பார்ப்பதை விரும்பாத டேவிட் அவனை மீண்டும் எச்சரிக்க, விக்டரோ தான் துப்பாக்கி மட்டும் பிடித்திருந்ததாகவும் துப்பாக்கியின் விசையை டேவிடை நோக்கி குறிபார்த்து இழுத்தது சான்செஸ் தான் எனவும் கூறும் விக்டர் அதற்க்கு காரணம் அப்போது க்ளாராவிடம் தொடர்பில் இருந்த அந்த ஆசாமி டேவிட் தான் என்றும் கூற வெட்கி தலை குனிகிறான் டேவிட்.

தன்னை தன மனைவி மன்னித்துவிடுவாள் என நினைத்து அதனை ஒளிக்காமல் தனது மனைவியிடம் கூறுகிறான் டேவிட் . ஒரு நாள் தனிமையில் இருக்கும் ஏலேனாவிடம், அவளை படுக்கையில் வீழ்த்தி டேவிடை தான் பழி வாங்க யோசித்தது வைத்திருந்த திட்டத்தை தான் கைவிட்டு விட்டதாக கூறுகிறான் விக்டர். டேவிட் க்ளாராவிடம் வைத்திருந்த தொடர்பை அறிந்து வருத்தத்தில் இருந்த எலேனா, கோவத்தில் தன்னையே விக்டரிடம் பகிர்ந்து கொண்டு, இடுப்புக்கு கீழ் செயல் இழந்த டேவிடை திருமணம் செய்து எதுவும் அனுபவித்திராத தனது வேட்கையை தணித்துக் கொள்கிறாள்..அதனை அப்படியே மறுநாள் டேவிட் இடம் கூற, அவனோ கதறி அழுது பின் அவள் மேல் தப்பில்லை என கூறி, சசெசின் வீடு செல்கிறான்.

விக்டரின் மீது மோகம் கொண்ட கிளாரா சாஞ்சசை பிரிந்து செல்கிறாள். க்ளாராவின் மீது உயிரையே வைத்திருக்கும் சாஞ்சஸ் அவளிடம் அழுது புலம்ப அவளோ அவனை உதாசீனப்படுத்திவிட்டு விக்டர் இல்லம் செல்கிறாள். சான்செசை தேடி வரும் டேவிட், க்ளாராவின் காதலன் விக்டர் தான் என தான் எடுத்த புகைப்படங்களை காண்பிக்க, கோவம் கொண்டு அவனை கொல்ல விரைகிறான் சான்செஸ். அங்கு தன்னை நோக்கி நீட்டிய துப்பாகியுடன் கிளாரவை கண்டு தானும் துப்பாக்கியை எடுக்க இருவரும் சுட்டு கொள்கின்றனர். அப்போது அங்கு வருகிறான் விக்டர். இறந்து போன கிளாரா மற்றும் இறக்கப்போகும் சாஞ்சசையும் மாறி மாறி பார்க்க சாஞ்சஸ் அவனை நோக்கி தனது துப்பாக்கியை உயர்த்த, வெளியே காரில் இருக்கும் டேவிட்க்கு உள்ளே இருந்து துப்பாக்கி வெடிக்கும் ஓசை கேட்கிறது.

அதன் பின் எலேனா மற்றும் டேவிடின் கதை என்னவானது என்பதை சஸ்பென்ஸ் த்ரில் கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது டேவிட் ஆக நடித்திருக்கும் ஆவியே பார்டமின் நடிப்பு. ஊனமுற்ற விளையாட்டு வீரராக பின்னி எடுத்திருக்கிறார்.அந்த சக்கர நாற்காலியில் அவர் கூடைபந்து ஆடும் லாவகமும், மனைவியின் மேல் வெளிப்படுத்தும் காதலும்,மனைவியின் துரோகம் தெரிந்ததும் பொங்கும் ஆவேசமும் என படம் முழுதும் வியாபிக்கிறது அவரது நடிப்பாற்றல். காவலர்கள் ஏலேனாவை காப்பாற்றபோகும்போது நடப்பதும், அதன் காரணமும் முக்கியமான திருப்பங்கள். விறு விறு வென செல்கிறது படம். அதே சமயம் காதலையும் துரோகங்களையும் கலந்து கட்டி அடிக்கிறது. பால்மடோரின் படைப்புகளில் இதுவும் ஒரு முக்கியமான படம். 1997 இல் வெளி வந்த இந்த படம் பாப்டா மற்றும் ஐரோப்பிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப் பட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் பல விருதுகளை அள்ளியது.

நிச்சயமாக வயது வந்தோருக்கான படம் இது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...